சென்னையில் இருந்து தேனிக்கு சிறப்பு ரெயில்; பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை


சென்னையில் இருந்து தேனிக்கு சிறப்பு ரெயில்; பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை
x
தினத்தந்தி 30 Aug 2023 2:30 AM IST (Updated: 30 Aug 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தேனிக்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி

தேனி மாவட்ட ரெயில் பயணிகள் சங்க தலைவர் சங்கரநாராயணன், தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை-மதுரை ரெயிலை போடி வரை நீட்டித்ததால், தேனி மாவட்ட மக்கள் அதிகம் பயன் அடைகின்றனர். ரெயில்வே துறைக்கும் அதிக லாபம் அளிக்கும் வகையில் உள்ளது. இந்த ரெயில் வாரத்தில் 3 நாட்கள் போடியில் இருந்தும், 3 நாட்கள் சென்னையில் இருந்தும் இயக்கப்படுகிறது. இதனை வாரத்தின் 7 நாட்களும் இயக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். போடியில் இருந்து மதுரை செல்லும் ரெயில் தற்போது போடியில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு மதுரை செல்கிறது. இதனை மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு மதுரை செல்லும் வகையில் மாற்றினால், மதுரையில் இருந்து சென்னை, பெங்களூரு, மைசூரு போன்ற பல ஊர்களுக்கு செல்லும் ரெயில்களை இணைக்கும் வகையில் அமையும். தேனி மாவட்ட மக்களின் வசதிக்கேற்பவும், பல்வேறு பணிகளுக்கு மதுரை செல்பவர்கள், மாணவர்கள் ஆகியோர் பயன்படும் வகையிலும் போடியில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு காலை 9 மணிக்கு மதுரை செல்லும் வகையிலும், மதுரையில் இருந்து மாலை 7 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு போடிக்கு வரும் வகையில் ஒரு புதிய சேவை உருவாக்கப்பட்டால் தேனி மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரெயில்வே துறைக்கும் லாபகரமான திட்டமாக இருக்கும்.

தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்களை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக தேனியை சேர்ந்த ஏராளமானோர் சென்னையில் இருந்து தேனிக்கு வருகின்றனர். அந்த நேரங்களில், அரசு பஸ், ஆம்னி பஸ்கள் போதாமல் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதனை தவிர்க்க, இது போன்ற விழாக்காலங்களில் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டால் மிகவும் பலனுள்ளதாக இருக்கும். எனவே வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தேனிக்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story