பொங்கல் பானை தயாரிப்பு பணி கடும் பாதிப்பு


பொங்கல் பானை தயாரிப்பு பணி கடும் பாதிப்பு
x
தினத்தந்தி 25 Dec 2022 12:30 AM IST (Updated: 25 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக ெபாங்கல் பானை தயாரிப்பு பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழைக்கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக ெபாங்கல் பானை தயாரிப்பு பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழைக்கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாரம்பரிய பண்டிகை

தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் உன்னத விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மனிதனுக்கு சகல வளங்களையும் தரும் இயற்கையை வேண்டி பிரார்த்தித்து, போற்றுவதே பொங்கல் பண்டிகையின் நோக்கம். பொங்கல் பண்டிகை நாளில் விவசாயத்துக்கு உறுதுணையாக விளங்கும் சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் வழிபாடுகள் நடக்கின்றன. சூரியன் உதிக்கும் நேரத்தில் வீட்டு வாசலில் பொங்கலிட்டு படைத்து, பொங்கலோ, பொங்கல் என முழக்கமிட்டு பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள்.

மண்பானைகள் மீது ஆர்வம்

நவீன காலத்துக்கு ஏற்ப பொங்கல் பண்டிகையிலும் மாற்றங்கள் வந்துள்ளன. ஆரம்ப காலத்தில் மண் அடுப்பில் மண் பானையை வைத்து பொங்கலிட்டனர். நவீனத்துவம் வளர, வளர மண் அடுப்பு மண் எண்ணெய் அடுப்பாகவும், கியாஸ் அடுப்பாகவும், மின்சார அடுப்பாகவும் மாற்றம் பெற்றது. மண் பானை பித்தளை, சில்வர் பாத்திரங்களாகவும் உருமாற்றம் அடைந்தன. இந்த மாற்றம் சில காலங்கள் நீடித்து வந்த நிலையில் தற்போது நவீன பொங்கல் மீதான ஆர்வம் தற்போது குறைந்து விட்டது.

அதில் உயிரோட்டம் இல்லாத காரணத்தால் பலர் தற்போது மண் அடுப்புகளையும், மண்பானைகளையும் விரும்பி தேர்வு செய்து வருகிறார்கள்.

பாரம்பரிய முறைப்படி...

ஆனால் மண் அடுப்புகளையும், மண் பானைகளையும் வடிவமைக்கும் திறன் படைத்த மண்பாண்ட தொழிலாளர்களின் நிலை இன்னும் பரிதாபமாகவே உள்ளது. என்னதான், பாரம்பரியம் என மக்கள் பேசினாலும், மண்பாண்ட தொழிலாளர்களின் ஏழ்மை நிலை மாறவில்லை. அவர்கள் தங்கள் வாழ்வாதாரமான மண் எடுப்பதற்கே சிரமப்படுகிறார்கள்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செட்டிபுலம், செம்போடை, பிராந்தியங்கரை, கரியாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் காலம் காலமாக மின் எந்திரங்கள் உதவியில்லாமல் திருவை வைத்து பாரம்பரிய முறைப்படி கையால் மண்பாண்டம் செய்து வருகிறார்கள்.

தொடர் மழையால் பாதிப்பு

பொங்கல் பானை, சட்டி, அடுப்பு, திருமண சடங்குகளுக்கு தேவையான மண்பாண்டங்கள், குடமுழுக்கு நடத்த பயன்படும் கலசங்கள் செய்து விற்பனை செய்து வாழ்க்கை நடத்துகின்றனர். இவர்களுக்கு மண்பாண்டம் செய்ய பயன்படும் மண் எடுப்பதில் மிகுந்த சிரமம் உள்ளது. ஒரு லோடு மண்ணை, ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விலைக்கு வாங்கி மண்பாண்டங்களை செய்து வருகிறார்கள்.

இந்த ஆண்டு பொங்கலுக்கு இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில் நாகை மாவட்ட பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் வேதாரண்யம் பகுதியில் மண்பாண்டம் தயாரிப்பு பணி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

தொழிலாளர்கள் பரிதவிப்பு

வெயில் இல்லாததால் தயாரிக்கப்பட்ட மண் பாண்டங்களை காய வைக்க முடியாமல் தொழிலாளர்கள் பரிதவித்து வருகிறார்கள். இதுகுறித்து செம்போடை மண்பாண்ட உற்பத்தியாளர் பிலோரா கூறியதாவது:-

தொடர் மழையால் ெபாங்கல் பண்டிக்கைக்கு மண் பானை, அடுப்பு, சட்டி உள்ளிட்ட பொருட்களை முறைப்படி தயாரிக்க முடியவில்லை. மண் கிடைப்பதில் பல சிரமங்கள் உள்ளன. சட்டி, பானைகளை ரூ.50 அல்லது ரூ.60 என்ற விலைக்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இந்த விலை கூலிக்கு கூட கட்டுப்படியாகவில்லை. இளைஞர்கள் இந்த தொழிலை விரும்பாமல் வேறு தொழிலுக்கு செல்ல தொடங்கி விட்டனர். எங்கள் கிராமத்தில் மட்டுமே 32 பேர் நலவாரியத்தில் சேர்ந்து அரசின் நலத்திட்டங்களை பெற்று வருகிறோம். மழைக்கால நிவாரணத்தை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

மண்பாண்டம் செய்யும் தொழிலாளருக்கு இலவச மின்சாரம் வழங்கவும், களிமண் எடுக்க எளிதான நடைமுறைகளையும் அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.


Next Story