பழங்குடியினருக்கான இட ஓதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த கோரிக்கை


பழங்குடியினருக்கான இட ஓதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த கோரிக்கை
x

பழங்குடியின மக்களுக்கான இட ஓதுக்கீட்டை கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று தமிழக ஆதிவாசி அமைப்புகளின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவண்ணாமலை

பழங்குடியின மக்களுக்கான இட ஓதுக்கீட்டை கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று தமிழக ஆதிவாசி அமைப்புகளின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பழங்குடி மக்கள் மாநில மாநாடு

தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு பழங்குடி மக்கள் மாநில மாநாடு ஜமுனாமரத்தூர் பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. மாநில தலைவா் வெங்கடேசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் லீலாவதி முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் கஜேந்திரன் வரவேற்றார். மாநில அமைப்பாள் ரெங்கநாதன் மாநாட்டு விளக்க உரையாற்றினார். எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாநாட்டில் வன உரிமை சட்டம் 2006-ஐ முழுமையாக நடைமுறை படுத்த வேண்டும்.

வனநில உரிமை சட்டம் 2006-ன் படி வனங்களை சார்ந்து வாழ்வோருக்கு ரூ.10 ஏக்கர் நிலமும், நிலமற்ற தரைப்பகுதிகளில் வாழும் ஆதிவாசிகளுக்கு தமிழக முதல்- அமைச்சரின் நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 ஏக்கர் நிலமும் உடனடியாக அரசு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் வன கிராமங்களை கண்டறிந்து வருவாய் கிராமங்களாக மாற்ற வேண்டும். பழங்குடியின மக்களுக்கான இட ஓதுக்கீட்டை கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 5 சதவீதமாக உயர்த்தி அனைத்து அரசு வேலைகளுக்கும் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஆதிவாசி மக்களுக்கு மீண்டும் 3 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்க வேண்டும்.

தார் சாலைகள் வேண்டும்

நாடாளுமன்ற தொகுதிகளில் குறைந்தபட்சம் ஒரு தொகுதியாவது ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஜவ்வாதுமலையில் உள்ள 11 பஞ்சாயத்திலுள்ள 272 கிராமங்களிலும் போடப்பட்ட ஜல்லி சாலை, மண்சாலை மிக விரைவில் தார் சாலையாக அமைக்க வேண்டும். ஜமுனாமரத்தூரை தலைமையிடமாக கொண்டு பழங்குடியினருக்கென தனிச்சட்டமன்ற தொகுதியை விரைவில் ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் ஒன்றிய குழு தலைவர் ஜீவாமூர்த்தி, துணைத் தலைவர் மகேஸ்வரி செல்வம், மாநில பொதுச் செயலாளர் குணசேகரன், முன்னாள் மாநில தலைவர் கணேசன், தமிழ்நாடு பழங்குடியினர் மக்கள் நல முன்னேற்ற சங்க மாநில தலைவர் தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story