வணிகர்களின் வரி சுமையை குறைக்க கோரிக்கை
வணிகர்களின் வரி சுமையை குறைக்க வேண்டும் என்று சமான் அதிகார் பார்டி கோரிக்கை விடுத்து உள்ளது.
மதுரை, மாட்டுத்தாவணி அருகே சமான் அதிகார் பார்டி என்ற வடமாநில தேசிய அரசியல் கட்சியின் தேசிய தலைவர் குல்தீப் சர்மா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்களது கட்சியானது வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட தீர்மானித்திருக்கிறது, அதன்படி தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடவும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகிறது. இதன் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் கட்சியின் வளர்ச்சிக்காக தமிழகத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளராக பீரேந்திர குமார் அகர்வால் செயல்படுவார். மேலும் இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டத்தை அனைவருக்கும் பொதுவாக இயற்றுதல் அவசியம், பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 15 நாட்களுக்குள் தூக்கு தண்டனை வழங்கும் வகையில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும், இந்தியாவில் பசுவதையை தடுப்பதற்கு பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வைத்து எங்கள் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெறும். மேலும் வணிகர்களின் வரி சுமையை குறைக்க வேண்டும், தமிழகத்தின் பிரச்சினைகளுக்காக எங்கள் கட்சியின் நிர்வாகிகளும் தொடர்ந்து போராடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.