கடையில் கல்வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் நிலையத்தை அனைத்து கட்சியினர் முற்றுகை சத்தியமங்கலத்தில் பரபரப்பு


கடையில் கல்வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி  போலீஸ் நிலையத்தை அனைத்து கட்சியினர் முற்றுகை   சத்தியமங்கலத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Sep 2022 7:30 PM GMT (Updated: 23 Sep 2022 7:30 PM GMT)

சத்தியமங்கலத்தில் பரபரப்பு

ஈரோடு

சத்தியமங்கலத்தில் கடையில் கல் வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் நிலையத்தை அனைத்து கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடையடைப்பு

இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக கூறி நீலகிரி ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து கடந்த 20-ந் தேதி இந்து முன்னணி சார்பில் சத்தியமங்கலத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. அன்று காலை கோட்டுவீராம்பாளையத்தில் திறந்து வைத்திருந்த பேக்கரி டீக்கடையை சிலர் கல்வீசி கண்ணாடிகளை உடைத்தனர். இதேபோல் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் திறந்து இருந்த ஒரு டீக்கடையை அடைக்க ஒருவர் வலியுறுத்தினார். இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஆர்.ஜானகிராமசாமி நேரில் சென்று கடையை திறப்பதும், அடைத்து வைப்பதும் வியாபாரிகள் சுதந்திரம் என கூறினார். இதனால் கடையை அடைக்க கூறியவருக்கும், நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி ராமசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அன்றைய சம்பவம் தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

போலீஸ் நிலையம் முற்றுகை

இந்த நிலையில் புரட்சி இளைஞர் முன்னணி நிர்வாகி வேங்கையன் தலைமையில் அனைத்து கட்சியினர் ஒன்று திரண்டு வந்து சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் சத்தியமங்கலம் நகர தி.மு.க. முன்னாள் செயலாளர் கே.ஆர்.சபியுல்லா, காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஸ்டாலின் சிவக்குமார், ஜமேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பெரியகாளையன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் பொன்னுசாமி, தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த அப்துல்லா, திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த பழனிச்சாமி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகி ஆசிப்உல்லா உள்பட திரளானோர் போலீஸ் நிலையம் முன்பு உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு நீலகண்டன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது போலீசாரிடம் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கட்சியை சேர்ந்தவர்கள் கூறுகையில், 'கடை மீது கல் வீசி சேதம் செய்தவர்கள் மற்றும் அவர்களை தூண்டியவர்கள் என அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும் சத்தியமங்கலம் நகர தி.மு.க. செயலாளரும், நகராட்சி தலைவருமான ஆர்.ஜானகி ராமசாமியை பெண் என்றும் பாராமல் மிகவும் தரக்குறைவாக பேசியவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும்,' என்றனர். இதுகுறித்து புகாராக அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என துணை போலீஸ் சூப்பிரண்டு நீலகண்டன் கூறினார்.

இதில் சமாதானம் அடைந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சத்தியமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story