குடிநீர் சீராக வினியோகிக்க கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் அந்தியூரில் பரபரப்பு


குடிநீர் சீராக வினியோகிக்க கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் அந்தியூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 29 Jan 2023 1:00 AM IST (Updated: 29 Jan 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூரில் பரபரப்பு

ஈரோடு

அந்தியூரில் குடிநீர் சீராக வினியோகிக்க கோரி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகை போராட்டம்

அந்தியூர் பேரூராட்சி பகுதியில் 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ளவர்களுக்கு 8 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. அதுவும் போதுமான அளவுக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் அந்தியூர் பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என திரளானோர் திரண்டு வந்து அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று காலை 10 அணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார், அந்தியூர் பேரூராட்சி செயல் அதிகாரி செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், '8 நாட்களுக்கு ஒரு முறை எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் எங்களுக்கு குடிநீர் முறையாக கிடைக்கவில்லை. அதுவும் குறைந்த நேரமே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன்காரணமாக போதிய அளவு தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே எங்களுக்கு குடிநீர் சீராக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். அதற்கு அதிகாரிகள் பதில் அளிக்கையில், '5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். இதில் பொதுமக்கள் சமாதானம் அடைந்து தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு 11 மணிக்கு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பொதுமக்கள் முற்றுகை போராட்டம் காரணமாக அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story