வேடசந்தூர்-சென்னை அரசு விரைவு பஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை
வேடசந்தூர்-சென்னை அரசு விரைவு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வேடசந்தூரில் வட்டார நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்க கூட்டம் நடந்தது. சங்கத்தின் கவுரவ தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். தலைவர் தில்லை சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். செயலாளர் பூவை நேருமாணிக்கம் வரவேற்று, சங்க செயல்பாடுகள் குறித்து பேசினார். பின்னர் கூட்டத்தில், வேடசந்தூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த அரசு விரைவு பஸ் கடந்த ஓராண்டாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்.
இதேபோல் வடமதுரையில் இருந்து வேடசந்தூர் வழியாக கோவை செல்லும் அரசு பஸ்சை வழக்கம்போல காலை மற்றும் மாலையிலும் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி குடகனாறு அணையின் ஷட்டர் பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.