ஆக்கிரமித்து கட்டப்பட்ட 15 வீடுகள் இடித்து அகற்றம்


ஆக்கிரமித்து கட்டப்பட்ட 15 வீடுகள் இடித்து அகற்றம்
x

பள்ளிகொண்டா அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட 15 வீடுகளை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

வேலூர்

ஆக்கிரமிப்பு

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி கூட்ரோட்டில் தமிழக நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சுமார் 1½ ஏக்கர் இடம் உள்ளது. அந்த இடத்தை 25-க்கும் மேற்பட்டவர்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் மற்றும் கடைகள் கட்டி உள்ளனர். தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றியபோது இந்த சாலையில் அதிக அளவில் போக்குவரத்து ஏற்பகிறது.

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை, ஸ்ரீபுரம் பொற்கோவில், அணைக்கட்டு தாலுகா அலுவலகம், பாகாயம் தனியார் மருத்துவமனை உள்ளிட்டவைகளுக்கு செல்வதற்கும் மற்றும் திருவண்ணாமலை, ஆரணி செல்வதற்கும் இந்த சாலையை வாகன ஓட்டிகள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த சாலை போக்குவரத்து நெரிசல் கொண்டதாக மாறியது.

இடித்து அகற்றம்

இந்த நிலையில் சாலை ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் அந்தப்பகுதியில் நின்று பயணம் செய்வதற்கு போதிய இட வசதி இல்லாததால் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் 6 வார காலத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் 6 மாதமாகியும் அங்கிருந்து வெளியேறாமல் இருந்தனர்.

அதைத்தொடர்ந்து நேற்று ஆக்கிரமிப்பை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி அணைக்கட்டு தாசில்தார் வேண்டா மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், நில அளவையர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் சென்று 15-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து அப்புறப்படுத்தினர்.

கதறி அழுத மூதாட்டி

அப்போது மூதாட்டி ஒருவர் தனது வீட்டை இடிக்க வேண்டாம் எனக்கூறி கதறி அழுதார். வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் அந்த மூதாட்டியை பாதுகாப்பாக வேறு இடத்தில் அமர வைத்துவிட்டு, அவரது வீட்டையும் இடித்துதரைமட்டமாக்கினர். இதனையடுத்து அந்தப்பகுதியில் வீடு இல்லாத மூன்று பேருக்கு மட்டும் பொய்கை மற்றும் கருங்காலி ஊராட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

ஆக்கிரமிப்பு அகற்றத்தையொட்டி வேலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில், பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்- இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, தனிப்பிரிவு போலீஸ்காரர் வெங்கடேசன் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அணைக்கட்டு தாசில்தார் வேண்டா கூறுகையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர்கள் இடத்தை காலி செய்யவில்லை. இதனால் வேறு வழியின்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 15-க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்கும் நிலை உருவானது என்றார்.


Next Story