16 வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது
குன்னூரில் ஓடை புறம்போக்கு நிலத்தில் கட்டிய 16 வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது.
குன்னூர்
குன்னூரில் ஓடை புறம்போக்கு நிலத்தில் கட்டிய 16 வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது.
புறம்போக்கு நிலம்
தமிழக அரசின் வருவாய்த்துறைக்கு சொந்தமான ஓடை புறம்போக்கு நிலத்தில் வீடுகள் கட்ட கூடாது என்றும், அவ்வாறு கட்டியிருந்தால் அவற்றை அகற்ற வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தவிட்டுள்ளது. அதன்படி வருவாய்த்துறையினர் ஓடை புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குன்னூர் நகராட்சியின் 3-வது வார்டுக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகரில் ஓடை புறம்போக்கு நிலத்தில் வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் அங்கு ஓடை புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட 16 வீடுகளை காலி செய்ய வருவாய்த்துறையினர் உத்தரவிட்டனர். மேலும் அவர்களுக்கு கேத்தி அருகே மாற்று வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. எனினும் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள வீடுகள் சரியான முறையில் காலி செய்யப்படாமல் இருந்தது.
வீடுகள் இடிப்பு
இதற்கிடையில் அங்கு நடைபாதையின் ஓரத்தில் மன்றம் கட்டப்பட்டு வருவதாகவும், பழுதடைந்த வீட்டை புனரமைத்து வருவதாகவும் குன்னூர் வருவாய்த்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷ்ண குமார், தாசில்தார் சிவக்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர், குன்னூர் நகராட்சி நகரமைப்பு அலுவலர்கள் ஆகியோர் நேற்று எம்.ஜி.ஆர். நகரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து நகராட்சி ஊழியர்களை கொண்டு காலியாக உள்ள 16 வீடுகளை இடிக்கும் பணி தொடங்கப்பட்டது. புதிதாக கட்டப்பட்ட மன்ற கட்டிடம்,மற்றும் வீடுகளை புனரமைப்பு செய்பவர்கள் தாங்களாக முன் வந்து காலி செய்ய வேண்டும் என்று வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.