17 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
ராஜபாளையத்தில் 17 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதையொட்டி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் 17 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதையொட்டி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பு வீடுகள்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியின் 12-வது வார்டுக்கு உட்பட்டது அண்ணா நகர். இப்பகுதியில் அமைந்துள்ள கொண்டநேரி கண்மாயின் நீர்நிலை புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து வீடுகள், கட்டிடங்கள், நாய் பண்ணை உள்ளிட்டவை அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இப்பகுதியில் இருந்த சில கட்டிடங்கள் வருவாய் துறையினரால் அகற்றப்பட்டன. நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை காலி செய்ய அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இந்தநிலையில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் அந்த இடத்தில் இருந்து வெளியேறவில்லை எனக்கூறி கடந்த மாதம் 26-ந் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் வந்தனர். அப்போது அதிகாரிகளை சூழ்ந்து கொண்ட மக்கள் வீடுகளை காலி செய்ய அவகாசம் வேண்டும் என்றனர்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் 10 நாட்களுக்குள் வீடுகளை காலி செய்யுமாறு அறிவுறுத்திவிட்டு ஆட்கள் இல்லாத ஒரு சில வீடுகளை மட்டும் அகற்றிவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர். இந்தநிலையில் நேற்று 3-வது முறையாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற தாசில்தார் ராமச்சந்திரன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் வந்தனர்.
17 வீடுகள் அகற்றம்
அப்போது தெருவின் முன்பாக திரண்ட மக்கள் அதிகாரிகளை உள்ளே நுழைய விடாமல் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் பேசியும் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்ய முயன்றனர்.
அப்போது கைதாக மறுத்து, அப்பகுதி மக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 29 பேரை போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் எந்திரம் மூலம் 17 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.