டேனிஷ்பேட்டையில் ரெயில்வே நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 34 வீடுகள் இடித்து அகற்றம்


டேனிஷ்பேட்டையில் ரெயில்வே நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 34 வீடுகள் இடித்து அகற்றம்
x

டேனிஷ்பேட்டையில் ரெயில்வே நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 34 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. அசம்பாவித சம்பவங்களை தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

சேலம்

ஓமலூர்:

ரெயில்வே நிலம் ஆக்கிரமிப்பு

டேனிஷ்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே ரெயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான 1¼ ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வீடுகளை கட்டி குடியிருந்தனர். இதனால் ரெயில்வே நிர்வாகம் சார்பில் வீடுகளை அகற்றக்கோரி அவர்களுக்கு 2 முறை நோட்டீசு வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் வீடுகளை அகற்றவில்லை.

இந்தநிலையில் ரெயில்வே நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 34 வீடுகளையும் உடனடியாக அகற்றக்கோரி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு 3-வது முறையாக நோட்டீசு வழங்கப்பட்டது. மேலும் வீடுகளை அகற்றாவிட்டால் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து சிலர் தாங்களே தங்கள் வீடுகளில் இருந்த பொருட்களை எடுத்து சென்றனர்.

வீடுகள் இடித்து அகற்றம்

இந்தநிலையில் நேற்று ஆக்கிரமித்து கட்டப்பட்ட 34 வீடுகளை அப்புறப்படுத்தும் பணி மேட்டூர் உதவி கலெக்டர் வீர் பிரதாப் சிங் தலைமையில், காடையாம்பட்டி தாசில்தார் அருள் பிரகாஷ் மற்றும் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர். அதன்படி 34 வீடுகளும் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

இதையொட்டி அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடக்காத வகையில் ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story