ஆக்கிரமித்து கட்டப்பட்ட நகராட்சி கழிப்பறை இடித்து அகற்றம்


ஆக்கிரமித்து கட்டப்பட்ட நகராட்சி கழிப்பறை இடித்து அகற்றம்
x

பழனி வையாபுரிகுளத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட நகராட்சி கழிப்பறை இடித்து அகற்றப்பட்டன.

திண்டுக்கல்

பழனி நகரின் மைய பகுதியில் வையாபுரிகுளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற பொதுப்பணித்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதன் எதிரொலியாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வையாபுரிகுளத்தில் நில அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் ஊன்றப்பட்டன. இதைத்தொடர்ந்து குளத்தை சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து நகராட்சி கட்டண கழிப்பறை கட்டப்பட்டிருந்தது. இதனை அகற்ற பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் உதயக்குமார் தலைமையிலான அதிகாரிகள், பாளையம் பகுதியில் உள்ள அந்த கழிப்பறை கட்டிடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

முன்னதாக கழிப்பறையை இடித்து அகற்றுவதற்கு, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசக்தி, நகராட்சி ஆணையர் கமலா மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது. எனவே பாளையம் பகுதி மக்களின் கழிப்பிட வசதிக்கு தற்காலிக நடவடிக்கை எடுப்பதாகவும், விரைவில் கழிப்பிட வசதி இல்லாத வீடுகள் குறித்து கணக்கெடுத்து அவர்களுக்கு கழிப்பிடம் கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story