நள்ளிரவில் விநாயகர் கோவில் இடிப்பு


நள்ளிரவில் விநாயகர் கோவில் இடிப்பு
x

செய்யாறில் நள்ளிரவில் விநாயகர் கோவில் இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறில் நள்ளிரவில் விநாயகர் கோவில் இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விநாயகர் கோவில் இடிப்பு

செய்யாறில் திருவத்திபுரம் நகராட்சிக்குச் சொந்தமான பஸ் நிலையப் பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அருகே பழமை வாய்ந்த விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இக்கோவிலுக்குச் சொந்தமான இடத்தினை ஒருவர் ஏற்கனவே ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இந்த நிலையில், மீதி இடத்தினையும் ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கத்தோடு விநாயகர் கோவிலை நேற்று நள்ளிரவில் காரில் வந்த 4 பேர் இடித்து உள்ளனர்.

போலீசில் புகார்

இதனைக் கண்ட அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் இந்து முன்னணியினருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் செய்யாறு நகரத்தைச் சேர்ந்த இந்து முன்னணியினர் செய்யாறு போலீசாருக்கு புகார் அளித்தனர். மேலும் போலீஸ் நிலையம் முன்பு இந்து முன்னணியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே செய்யாறு போலீசார் இந்து முன்னணியினரை சமாதானம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

4 பேர் கைது

தொடர்ந்து செய்யாறு போலீசார் விரைந்து சென்று கோவிலை இடித்துக் கொண்டிருந்த 4 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை செய்யாறு ஆய்வாளர் பா.முத்துசாமியும் செய்யாறு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் பாலு, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் கீழ்புதுப்பாக்கம் காலனியைச் சேர்ந்தவர்களான பாஸ்கர் (வயது 40), இவரது தம்பி நேரு (36), பாப்பாந்தாங்கல் கிராம காலனியைச் சேர்ந்த சரத்குமார் (30), செய்யாறு வைத்தியர் தெருவைச் சேர்ந்த பொன்.மணிகண்டன் (25) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

விநாயகர் கோவில் இடிக்கப்பட்ட சம்பவத்தால் செய்யாறில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story