புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை இடிப்பு
நெல்லை வண்ணார்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை இடிக்கப்பட்டது.
நெல்லை வண்ணார்பேட்டையில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்து பல்வேறு நடவடிக்கை எடுத்தனர். அதன்படி 3 பயணிகள் நிழற்குடைகள் இடித்து அகற்றப்பட்டன. அனைத்து மக்களும் ஒரே இடத்தில் வந்து பஸ் ஏறி செல்லும் வகையில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பஸ்நிறுத்தங்கள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் ஏற்கனவே ஒரு பிரபல ஜவுளிக்கடை முன்பு இருந்த பயணிகள் நிழற்குடை இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் நிழற்குடை கட்டினார்கள். ரூ.12 லட்சம் செலவில் நிழற்குடை அமைக்கப்பட்டு, கீழே நடைபாதை கற்களும் பதிக்கப்பட்டன. இந்த நிழற்குடை அமைக்க பலரும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், எதிர்ப்பையும் மீறி கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் இருந்தது.
இங்கு பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டதையொட்டி டவுன் பஸ்கள் அதன் அருகில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல தொடங்கின.
இந்தநிலையில் நேற்று அந்த பயணிகள் நிழற்குடையை இடித்து அகற்றும் பணியை தொடங்கினார்கள். தொழிலாளர்கள் பயணிகள் நிற்கும் பகுதியில் உள்ள தளக்கற்களை அகற்றினார்கள். உரிய அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாகவும், அதனால் முழுமையாக பயணிகள் நிழற்குடை அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.