சாலை ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறி புதிதாக கட்டப்பட்ட பள்ளி சுற்றுச்சுவர் இடிப்பு
நீலந்தாங்கல் கிராமத்தில் சாலை ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறி புதிதாக கட்டப்பட்ட பள்ளி சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள நீலந்தாங்கலில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளிக்கு மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கடந்த 8மாதங்களுக்கு முன்பு ரூ.5லட்சத்து 83 ஆயிரம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.
இந்த சுவர் சாலையை ஆக்கிரமிக்கும் வகையில் கட்டப்பட்டிருப்பதாக கூறி அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இது தொடர்பாக கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) நடவடிக்கையின்பேரில் சுற்றுச்சுவர் அளவீடு செய்யப்பட்டு தாசில்தாரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அதில் சாலையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து சரியான அளவீட்டின்படி சுற்றுச் சுவரை கட்ட வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி (கிராம ஊராட்சி) உத்தரவிட்டார்.
அதன்பேரில், புதியதாக கட்டப்பட்ட பள்ளிக்கூட சுற்றுச்சுவரை இடிக்கும் பணி நேற்று நடந்தது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தீபாராஜா, ஊர்பிரமுகர் வெங்கடேசன் மற்றும் பொதுமக்கள் சுற்றுச் சுவரை இடித்தவர்கள் மீது கலெக்டர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
மேலும் பொதுமக்கள் இன்று கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் ஆணையாளர் அருணாச்சலம், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) காந்திமதி ஆகியோரிடம் மனு கொடுக்கப்பட்டது. மனுவில் பள்ளியின் பாதுகாப்புகருதி சுற்றுச்சுவரை இடித்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.