ஆக்கிரமித்து கட்டியிருந்த கட்டிடங்கள் அகற்றம்


ஆக்கிரமித்து கட்டியிருந்த கட்டிடங்கள் அகற்றம்
x

விராலிமலை அருகே ராஜாளிப்பட்டியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை பொக்லைன் எந்திரம் மூலம் நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.

புதுக்கோட்டை

வழக்கு தொடர்ந்தார்

விராலிமலை தாலுகா ராஜாளிப்பட்டி கடைவீதியில் சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது என கூறி அதே ஊரை சேர்ந்த மாற்றுத்திறனாளியான அண்ணாத்துரை (வயது 62) என்பவர் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அதன்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு முறைப்படி ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள அறிவுறுத்தி அறிவிப்பு நோட்டீஸ் கடந்த மாதம் வழங்கப்பட்டது. இதனையடுத்து இதுவரை ஆக்கிரமிப்புகளை வியாபாரிகள் அகற்றாததால் நேற்று நெடுஞ்சாலை துறையினர், வருவாய்த்துறையினர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றினர். மேலும் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பரபரப்பு

இந்நிலையில் வழக்கு தொடர்ந்த அண்ணாத்துரை என்பவரின் ஓட்டு வீட்டின் ஒருபகுதி, பண்ணையின் சுற்றுச்சுவர் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும் அதை முதலில் அகற்றிவிட்டு வருமாறும், அந்த ஆக்கிரமிப்பை அகற்றும் நேரத்துக்குள் தாங்களாகவே அகற்றி கொள்கிறோம் என ஆக்கிரமிப்பாளர்களில் சிலர் நெடுஞ்சாலைத்துறையினரிடம் முறையிட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இதற்கிடையே அண்ணாத்துரை மனைவி கோகிலா வீட்டுக்குள் இருந்த மண்எண்ணெயை பாட்டிலை கையில் எடுத்து கொண்டு வெளியே வந்தார். இதைப்பார்த்த போலீசார் கோகிலா கையில் இருந்த மண்எண்ணெயை பாட்டிலை பிடிங்கி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து வருவாய்த்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சுமுக பேச்சுவார்த்தையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீட்டின் ஒரு பகுதி மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். தொடர்ந்து கடைவீதியில் இருந்த மற்ற ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story