பயணிகள் நிழற்கூடம் கட்ட கட்டிடம் இடிப்பு


பயணிகள் நிழற்கூடம் கட்ட கட்டிடம் இடிப்பு
x

பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்கு கோர்ட்டு உத்தரவின்பேரில் கட்டிடம் இடிக்கப்பட்டது.

வேலூர்

பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்கு கோர்ட்டு உத்தரவின்பேரில் கட்டிடம் இடிக்கப்பட்டது.

கோர்ட்டு உத்தரவு

பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்காக தனி நபரிடம் தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் சார்பில் இடம் கேட்கப்பட்டது. ஆனால் அந்த இடத்தை தனி நபர் வழங்காமல் 10 ஆண்டு காலமாக காலம் கடத்தி வந்ததோடு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு தொடர்ந்ததால் பயணிகள் நிழற்கூடம் கட்டும் பணி நடைபெற வில்லை.

இந்த நிலையில் பொதுமக்கள் நலனுக்காகவும், நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காகவும் தனிநபர் அந்த இடத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்தன. அப்போது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நபர் இரண்டு நாள் அவகாசம் கேட்டதாகவும், அவரே முன்வந்து இடத்தை காலி செய்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கட்டிடம் இடிப்பு

ஆனால் தனிநபர் கூறியது போல் இரண்டு நாட்கள் ஆகியும் இடத்தை காலி செய்யாததால் அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், நெடுஞ்சாலைத்துறை நிலம் எடுப்பு தாசில்தார் (பொறுப்பு) முருகன், துணை தாசில்தார்கள் சுதா, ராமலிங்கம் மற்றும் பள்ளிகொண்டா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர், சுங்கச்சாவடி மேலாளர்கள் உள்பட ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் அங்கிருந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தினர்.

அப்போது கட்டிட உரிமையாளர் அங்கு வந்து அதிகாரிகளிடத்தில் ஒரு வக்கீல் நோட்டீசை கொடுத்து அதை பெற்றுக்கொள்ளுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைப் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் உங்கள் மீது வழக்கு தொடர்வேன் என்றார்.

ஆனால் அதிகாரிகள் வக்கீல் நோட்டீசை பெற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து 5 மணி நேரம் அதிகாரிகள் அங்கே அமர்ந்து கட்டிடம் முழுவதும் இடிக்கப்பட்ட பின்னரே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

பள்ளிகொண்டா கிராம நிர்வாக அலுவலர் ஞானசுந்தரி, நில அளவர் திலீப், கிராம உதவியாளர்கள் பிரான்சிஸ், வேலாயுதம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story