பள்ளிகளில் பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்களை இடிக்க வேண்டும்: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை
பள்ளிகளில் பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம், திண்டுக்கல் எம்.எஸ்.பி. மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. இதற்கு முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் பாண்டித்துரை, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் கதிரேசன், விஜயசரவணக்குமார் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது மழைக்காலமாக இருப்பதால் பள்ளிகளில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கட்டிடங்களை உடனடியாக இடிக்க வேண்டும். அதுவரை மாணவ-மாணவிகள் அந்த கட்டிடத்தின் அருகில் செல்லாமல் பார்த்து கொள்வது அவசியம். மாணவ-மாணவிகளின் கல்விக்கும், பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த மாணவர் அதே பள்ளியில் 11-ம் வகுப்பில் சேரவில்லை என்றால், மாணவரின் தற்போதைய நிலையை கண்டறியுங்கள். மேலும் மாணவ-மாணவிகள் படிப்பை பாதியில் நிறுத்தியது தெரியவந்தால், அவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். அதேபோல் பள்ளி, நூலகங்களில் இருக்கும் புத்தகங்களை மாணவ-மாணவிகள் வாசிக்க வேண்டும். அதுதொடர்பாக பதிவேட்டை பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.