வாகனங்களில் எத்தனாலை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்
இந்தியாவில் பெட்ரோலுக்கு பதிலாக வாகனங்களில் எத்தனாலை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ‘கள் இயக்கம்’ சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் பெட்ரோலுக்கு பதிலாக வாகனங்களில் எத்தனாலை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு 'கள் இயக்கம்' சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
எத்தனால் பயன்பாடு
தமிழக கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும், கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க தலைவருமான செ.நல்லசாமி மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார் அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதி காரணமாக ஆண்டுதோறும் சுமார் ரூ.20 லட்சம் கோடி அளவுக்கு மேல் மத்திய அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இதை தவிர்க்க இந்திய நாட்டில் எத்தனால் பயன்பாட்டை சுமார் 85 சதவீதம் அளவில் அதிகரிக்க மத்திய அரசு முன்வர வேண்டும். இதன் மூலம் எரிபொருள் நுகர்வில் இந்திய நாடு தன்னிறைவு அடையும் வாய்ப்பு ஏற்படும் உலக அளவில் சர்க்கரை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு பிரேசில் ஆகும்.
சர்க்கரை ஆலைகள்
இந்த நிலையில் பிரேசிலில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதியால் அதிக அந்நிய செலாவணி ஏற்பட்டது. இதனால் பிரேசில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. இதனால் பிரேசிலில் இருந்த ஏராளமான சர்க்கரை ஆலைகள் எத்தனால் ஆலைகளாக மாற்றப்பட்டு எத்தனால் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டது. இங்கு சர்க்கரை ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட எத்தனால் பெட்ரோலில் கலந்து வாகனங்களுக்கு எரி பொருளாக பயன்படுத்தி வாகனங்களை இயக்கும் முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இதனால் பிரேசிலில் அந்நிய செலாவணி இழப்பு வெகுவாக குறைந்து ஒலிம்பிக் போட்டியை அந்த நாட்டில் நடத்தும் அளவிற்கு முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைத்தது.
இந்த நிலையில் தற்போது சர்வதேச சந்தையில் சர்க்கரைக்கு நல்ல விலை இல்லை. இந்தியாவில் தற்போது ஓராண்டு நகர்வு சர்க்கரை தேவை 300 லட்சம் மெட்ரிக் டன்கள் ஆகும். அதே நேரத்தில் நடப்பு ஆண்டு 240 லட்சம் மெட்ரிக் டன்கள் சர்க்கரை உற்பத்தி ஆக வாய்ப்பு உள்ளது.
85 சதவீதம் எத்தனால்
இந்த சூழ்நிலையில் இந்தியாவில் பெட்ரோலுக்கு பதிலாக எத்தனாலை வாகனங்களில் எரிபொருளாக பயன்படுத்தும் முறை தொடங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் தற்போது 650 சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 200 சர்க்கரை ஆலைகளை எத்தனால் ஆலைகளாக மாற்றி எத்தனால் தயாரிக்க மத்திய அரசு உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அமெரிக்கா, பிரேசில் நாடுகளை போல் நமது இந்திய நாட்டில் பெட்ரோலில் 85 சதவீதம் எத்தனால் கலந்து வாகனங்கள் ஓட்ட அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.