மணிப்பூர் கலவரத்தை கண்டித்துகிருஷ்ணகிரியில் தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்எம்.எல்.ஏ.க்கள் டி.மதியழகன், ஒய்.பிரகாஷ் பங்கேற்பு
கிருஷ்ணகிரி
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த மாவட்ட மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கண்டன ஆர்ப்பாட்டம்
மணிப்பூரில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதலை கண்டித்தும், மத்திய மற்றும் அம்மாநில பா.ஜனதா அரசுகளை கண்டித்தும் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
இதற்கு கிழக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் லட்சுமிபிரியா தேவராஜன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் விஜயஸ்ரீ வரவேற்றார். இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு மணிப்பூர் கலவரத்தை கண்டித்துபேசினர்.
அநீதி இழைக்கப்பட்டுள்ளது
அப்போது மதியழகன் எம்.எல்.ஏ. பேசுகையில், மணிப்பூர் இயற்கை எழில் நிறைந்த மாநிலம் ஆகும். இன்று அந்த மாநிலம் கலவர பூமியாக காட்சி அளிக்கிறது. பெண்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை பார்க்கும் போது நெஞ்செல்லாம் பதைபதைக்கிறது. அந்த மாநிலத்தை ஆளும் பா.ஜனதா அரசாலும், மத்திய அரசாலும் வன்முறைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. சிறுபான்மை மக்களை கொச்சைப்படுத்தி உள்ளார்கள். அவர்களுக்கு எதிராக அங்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் அந்த மாநிலத்தில்உள்ளது. ஆனால் மத்திய அரசோ இந்த விவகாரத்தில் மவுனம் காக்கிறது. வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று பேசினார்.
அகற்ற வேண்டும்
ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. பேசுகையில், மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக கொடூரம் நடந்துள்ளது. இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வன்மையாக கண்டித்துள்ளார். இதை பற்றி இங்குள்ள பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேச மாட்டார். நாள்தோறும் தி.மு.க.வை பற்றியும், தி.மு.க. அமைச்சர்களை பற்றியும் பேசி வருகிறார். அவரால் மணிப்பூர் சம்பவத்தை பற்றி பேச முடியுமா?. 2024-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும். பா.ஜ.க. அரசை அகற்ற வேண்டும் என்று கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாநிலமகளிர் அணி பிரசார குழு செயலாளர் டாக்டர்.மாலதி நாராயணசாமி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் சாவித்திரி கடலரசுமூர்த்தி, புஷ்பா சர்வேஷ், கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை கண்டித்தும், அதை தடுக்க தவறியதாக பா.ஜனதா அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர்கள் தட்ரஅள்ளி நாகராஜ், யுவராஜ், கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், ஓசூர் மாநகராட்சி சுகாதார குழுத் தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சின்னசாமி, மாவட்ட பொருளாளர்கள் கதிரவன், சுகுமார், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், மற்றும் ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அணிகளின், அமைப்பாளர்கள், தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள் புஷ்பா, சாலம்மா ஆகியோர் நன்றி கூறினார்கள்.