ஓசூரில்தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓசூர்
தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஓசூர் மின் வாரிய அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது., சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீராமரெட்டி தலைமை தாங்கினார். மாநிலத்தலைவர் பேராசிரியர் எஸ்.ஏ. சின்னசாமி, மாநில பொதுச்செயலாளர் சுந்தரம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில், சட்டசபையில் அறிவித்தவாறு விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு காலதாமதம் இன்றி வழங்க வேண்டும், யானைகள் காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர் இதில் மாநில பொதுச் செயலாளர் திருச்சி கணேசன், சேலம் மாவட்ட செயலாளர் பெரியண்ணன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சென்னைய்ய நாயுடு, சிக்கண்ணா, மாவட்ட மகளிரணி தலைவி கிரிஜம்மா மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாநில தலைவர் சின்னசாமி கூறுகையில், இந்த மாத இறுதியில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகளை திரட்டி, தேன்கனிக்கோட்டையில் இருந்து கர்நாடக மாநிலம் மேகதாதுவை நோக்கிச் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினார்.