அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் ராஜம்மாள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கவிதா, மாநில செயற்குழு உறுப்பினர் கலாவதி, மாநில செயலாளர் லில்லி புஷ்பம், மாவட்ட பொருளாளர் தெய்வானை மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் சிலிண்டர் தொகையை பில்லில் உள்ளதை போல் முழுமையாக வழங்க வேண்டும். அரசு வழங்கிய செல்போன் பழுதடைந்த நிலையில் உள்ளதால் புதிய செல்போன் வழங்க வேண்டும். காலையில் சிற்றுண்டியை அங்கன்வாடி மையத்திற்கு அரசு செயல்படுத்தும் நிலையில் உதவியாளரை வைத்து உணவு சமைத்து வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
பதவி உயர்வு
அங்கன்வாடிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 10 ஆண்டுகள் பணியை முடித்த மினி மைய உதவியாளர், மேற்பார்வையாளர்களுக்கு நிபந்தனை இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். பிற துறை சார்ந்த பணிகளை செய்ய அங்கன்வாடி ஊழியர்களை கட்டாயப்படுத்த கூடாது என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள், கியாஸ் சிலிண்டர்களுடன் கலந்து கொண்டனர்.