ஆயுள் காப்பீட்டு முகவர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் ஆயுள் காப்பீட்டு முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க அடையாள அட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து, அகில இந்திய ஆயுள் காப்பீட்டு முகவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவர் முனுசாமி தலைமை தாங்கினார். செயலாளர் முருகானந்தம், பொருளாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜீவஜோதி, சுபா உள்பட ஏராளமான முகவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், பாலிசிக்கான போனசை உயர்த்த வேண்டும். பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். வெளிநாட்டு பாலிசிதாரருக்கு ஏதுவாக சேவை அளிக்கப்பட வேண்டும். அனைத்துவித விண்ணப்பங்களுக்கும் ஒப்புகை ரசீது தர வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாலிசிகளை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும். பணிக்கொடையை 20 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். மருத்துவக்குழு காப்பீடு அனைத்து முகவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.