விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரியில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், கிராமப்புற விவசாய தொழிலாளர்களின் வேலை உரிமையை பாதுகாக்கக்கோரி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் பூபதி, ஒன்றிய செயலாளர்கள் சித்தன், பூபதி, ரஜியா பேகம், ஒன்றிய குழு உறுப்பினர் ரஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்டக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
நிவாரணம்
ஆர்ப்பாட்டத்தின் போது, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப்பணி வேலை தொடங்கும் நேரத்தை காலை 9 மணி என திருத்தி அமைக்க வேண்டும். தினசரி தொழிலாளர்களை போட்டோ எடுக்கும் முறையை கைவிட வேண்டும். ஒரு குடும்பத்திற்கு 100 நாள் வேலை என்பதை உறுதிபடுத்த வேண்டும். வேலை கொடுக்க முடியாத நாட்களுக்கு சட்டப்படி வேலையில்லா கால நிவாரணம் வழங்க வேண்டும்.
வீடு இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கி அரசு இலவச வீடு கட்டித்தர வேண்டும். தினசரி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சட்டப்படி தினக்கூலி ரூ.281-ஐ முழுமையாக வழங்க வேண்டும். 60 வயது முடிந்த விவசாய தொழிலாளர்கள் அனைவருக்கும் நிபந்தனையின்றி மாதந்தோறும் பென்சன் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.