அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 இடங்களில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், அரசு அலுவலகங்கள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரியில் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். இதில் தேசிய நெடுஞ்சாலைத்துறை வெங்கடாசலபதி, கால்நடைத் துறை செல்வகுமார், வட்டச் செயலாளர் மணி, குடிநீர் வடிகால் வாரியம் பெரியசாமி, பெருமாள், சின்னசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தேன்கனிக்கோட்டை வட்ட கிளை சார்பில் தளி வட்டார வளர்ச்சி அலுவலகம், தேன்கனிக்கோட்டை பட்டு வளர்ச்சித்துறை அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட துணைத்தலைவர் முரளி தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் முருகேசன், திருநாவுக்கரசு, சம்சுல் ஆலம், கதிரவன், பிரவீன், லோகநாதன், சாந்தி, கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வரையறுக்கப்பட்ட ஊதியம்
ஆர்ப்பாட்டத்தில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படி, சரண் விடுப்பு வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர், அங்கன்வாடி ஊழியர், எம்.ஆர்.பி., செவிலியர்கள், கணினி இயக்குனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதேபோன்று ஓசூர், ராயக்கோட்டை, ஊத்தங்கரை, பர்கூர், காவேரிப்பட்டணம், மத்தூர், வேப்பனப்பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.