வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாவட்ட துணை தலைவர் பிரபு தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை கலெக்டர் பட்டியலை வெளியிட்டு, பதவி உயர்வு வழங்க வேண்டும். லக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்ற சங்க நிர்வாகிகளை அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் அருள்பிரகாஷ், ஜாகிர்உசேன், அகிலன், செம்மலை உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் முருகபூபதி நன்றி கூறினார். அரசு பேச்சுவார்த்தை நடத்தாத பட்சத்தில் வருகிற 23-ந்தேதி வருவாய்த்துறை அலுவலா்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் அறிவித்தனர்.