தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு போட்டதாக கூறி சேலத்தில் தி.மு.க. அரசை கண்டித்து நேற்று அ.தி.மு.க.வினர் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு போட்டதாக கூறி சேலத்தில் தி.மு.க. அரசை கண்டித்து நேற்று அ.தி.மு.க.வினர் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது மதுரையில் போலீசார் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு போடப்பட்டதாக கூறி தி.மு.க. அரசை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமை தாங்கினார். கட்சியின் அமைப்பு செயலாளர் செம்மலை, சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியன், மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் எடப்பாடி பழனிசாமி மீது மதுரையில் போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக்கோரியும், தி.மு.க. அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

வன்மையாக கண்டிக்கிறோம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் பேசும்போது, 'மதுரையில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் எதையும் கண்டு அஞ்சமாட்டார். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். பொய் வழக்கு போட்டு அடக்கி விடமுடியாது. தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும், அதன்பிறகு நடக்கும் சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். சேலம் மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டையாகும். மக்கள் விரோத போக்கை தி.மு.க. அரசு கைவிட்டு மக்களுக்கு நல்லது செய்யுங்கள்' என்றார்.

அ.தி.மு.க. ஆட்சி அமையும்

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செம்மலை பேசும்போது, 'துக்ளக் தர்பார் ஆட்சியை தாண்டி தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடந்து வருகிறது. தமிழகத்தில் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்பட்டுவிட்டது என்பதை குறிக்கும் விதமாக தான் மதுரையில் நடைபெற்ற சம்பவம் உள்ளது. காவல்துறையினர் இந்த ஆட்சியாளர்களின் ஏவல் துறையாக மாறிவிட்டார்கள். மக்களுக்கு ஆட்சியின் மீது உள்ள அதிருப்தியை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக இந்த வழக்குப்பதிவு போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதையும் எதிர்கொள்ள கூடியவர். அதற்கான சக்தி படைத்தவர். 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும்' என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜூ, சக்திவேல், ரவிச்சந்திரன், மாநகர் மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், பகுதி செயலாளர்கள், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கே.ஏ.கனகராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் கே.சி.செல்வராஜ், ஜனார்த்தனன், சந்திரா கிருபாகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜான்கென்னடி, சேலம் மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் செங்கோட்டையன், கூட்டுறவு சங்க தலைவர்கள் வே பிரிட்ஜ் ராஜேந்திரன், ராமராஜ், சேலம் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story