அரசு பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் அரசு பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். சங்க ஆலோசகர் மோமீன்கான், முன்னாள் மாநில துணைத்தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் ரேஷன் கடை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் நாகேஷ் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு வழங்கியது போல், கடந்த 2021 ஜூலை 1-ந் தேதி முதல் அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்க வேண்டும். ஒப்புவிப்பு ஊதியம் பெறுவதற்கான தடையை ரத்து செய்ய வேண்டும். மருத்துவ விடுப்பு ஊதியம் பெறுவதற்கான தடையை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியம் அனைத்து பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்கு முன்னர் பணியில் சேர்ந்து பின்னர் பதவி உயர்வு பெற்றவர்களுக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தின் வரவு-செலவு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.