அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றிய தலைவி ராணி தலைமை தாங்கினார். இதில் வேப்பனப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
காவேரிப்பட்டணம் அருகே உள்ள திம்மாபுரம் வட்டார அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் மஞ்சுளா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் குப்பம்மா, ஜெகதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் கஸ்தூரி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் நிர்வாகிகள் ரமா சாந்தி, மாலதி, கோமதி, ஆனந்தி, கன்னியாகுமரி, சரஸ்வதி, மைதிலி, சுமதி, தேவகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊதிய உயர்வு
ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவி வரும் சூழலில் 2 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளின் நலனை கருதி கோடை தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அங்கன்வாடி மையங்களுக்கு ஒரு மாத காலம் விடுமுறை வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பணம் வழங்க வேண்டும். பதவி உயர்வு பெற்று செல்லும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
சூளகிரி
சூளகிரி வட்டார அங்கன்வாடி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகி கவிதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் வசந்தா, அனிதா, சரிதா உள்பட கலந்து கொண்டனர். இதேபோன்று கெலமங்கலம் ஒன்றியம் குந்துமாரணப்பள்ளி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில துணை தலைவர் கோவிந்தம்மாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.