சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க கோரி லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்


சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்கக்கோரி லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்ந்துள்ளது. இதனை கண்டித்து சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை கருப்பூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் (டோல்கேட்டில்) மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளம் சார்பிலும் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பிலும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட பொருளாளர் செந்தில், மாவட்ட துணைத் தலைவர் தங்கவேல், நிர்வாகி சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுங்கச்சாவடி கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் சேலம், ஓமலூர், மேட்டூர், தாரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

தள்ளுபடி

தொடர்ந்து லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுங்க கட்டணத்தை உயர்த்த கூடாது என பலமுறை வலியுறுத்தி வருகிறோம். அப்படி இருந்தும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது வேதனையை தருகிறது. இந்த சுங்க கட்டண உயர்வை பஞ்சாப் மாநில அரசு தள்ளுபடி செய்துள்ளது. தமிழ்நாடு முதல்-அமைச்சரும் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் 60 கிலோ மீட்டருக்கு இடையில் உள்ள 33 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுகுறித்து தமிழக அமைச்சர்கள் மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி உள்ளனர். ஆனால் இதுவரை அந்த சுங்கச்சாவடிகளும் அகற்றப்படவில்லை. உடனே 33 சுங்க சாவடிகள் அகற்றப்பட வேண்டும்.

ஜி.பி.ஆர்.எஸ். கருவி

இதுபோல ஜி.பி.ஆர்.எஸ். கருவி மூலம் சுங்க கட்டணம் வசூலிப்போம் என மத்திய மந்திரி கூறியிருக்கிறார். தற்போது ஒரு வருடத்திற்கு சுங்க கட்டணம் மூலம் ரூ.36 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது என மத்திய அரசு கூறுகிறது. ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தி விட்டால் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி வருவாய் வரும்.

இதனால் லாரி உரிமையாளர்களும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தப்படுவதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சங்ககிரி

சங்ககிரி அருகே வைகுந்தம் சுங்கச்சாவடி முன்பு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் சுங்க கட்டணம் உயர்வு கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்ககிரி லாரி உரிமையாளர் சங்க தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார்.

ஆர்பாட்டத்தில் எடப்பாடி லாரி உரிமையாளர் சங்க தலைவர் சுப்பிரமணி, திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் மூர்த்தி, திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்க தலைவர் லட்சுமணன், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் மோகன்குமார், பொருளாளர் செங்குட்டுவேலு, உபதலைவர் சின்னதம்பி, இணைச்செயலாளர் முருகேசன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தலைவாசல்

தலைவாசலை அடுத்த நத்தக்கரை சுங்கசாவடி எதிரில் சுங்க கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து லாரி உரிமையாளர்கள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைவாசல் வட்டார லாரி உரிமையாளர் சங்க தலைவர் குமாரசாமி, செயலாளர் பழனியாண்டி, பொருளாளர் சண்முகம், வட்டார லாரி உரிமையாளர்கள் நல சங்க தலைவர் கோபால், செயலாளர் சிவசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story