கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். செயலாளர் ராஜமாணிக்கம், பொருளாளர் இருசப்பமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் குமார், கணேசன், இணைச்செயலாளர்கள் தமிழ்செல்வி, இதயசெல்வம், போராட்டக்குழு தலைவர் அய்யம்பெருமாள், செய்தி தொடர்பாளர் முருகானந்தம், ஓய்வு பெற்ற பணியாளர் நல சங்க தலைவர் செங்கான் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பயிர்க்கடன் வழங்குவதில் விதி மீறல்கள் என்று செயலாளர் மற்றும் பணியாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும். கடன் தள்ளுபடி திட்டத்தில் பயிர்க்கடன், நகைக்கடன், சுய உதவி குழு கடன் ஆகியவைகளுக்கு வட்டி இழப்பின்றி சங்கங்களுக்கு வழங்க வேண்டும். தவணை தவறிய நகைக்கடன்கள் மீது ஏல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் ஏற்பட்டு உள்ள இழப்புத்தொகைக்கு சங்க பணியாளர்கள் பொறுப்பாக்கப்பட்டு ஓய்வு கால நிதிப்பலனை நிறுத்தி வைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
உத்தரவிட வேண்டும்
நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் ஊதிய ஒப்பந்தம் 31.12.2021-வுடன் முடிவடைந்து விட்டது. இவர்களுக்கு 1.1.2022 முதல் புதிய ஊதிய நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு கடந்த 31-ந்தேதியுடன் ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டது. இவர்களுக்கு புதிய ஊதிய நிர்ணயம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும், பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சங்கங்களின் கணக்குகளை தணிக்கை செய்யும், தணிக்கை துறையை கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட வேண்டும். அல்லது பட்டய தணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் வைத்தனர். தொடர்ந்து கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலக அதிகாரியிடம் வழங்கினர். முன்னதாக சங்க பணியாளர்கள் ஊர்வலம் நடத்த முடிவு செய்தனர். இதற்்கு போலீசார் அனுமதி மறுக்கப்பட்டதால், ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.