தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதா மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதா மகளிர் அணி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம் மாவட்ட பா.ஜனதா மகளிர் அணி சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகளிர் அணி மாவட்ட தலைவி சுமதி தலைமை தாங்கினார். தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் இப்ராகிம், மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர். மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன், மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் பா.ஜனதா மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் மதுவிலக்கு இருந்த காலத்தில் கூட இப்படி கள்ளச்சாராயம் விற்பனை இருந்தது இல்லை. டாஸ்மாக் கடைகளிலும் போலி மது விற்பனை செய்யப்படுகிறது. வருமானம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக 40 சதவீதம் போலி மதுபானங்களை அரசாங்கமே விற்பனை செய்கிறது. எனவே, கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், என்றார்.