கிருஷ்ணகிரியில்வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா நரசிங்கபுரம் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீது கடந்த 27-ந் தேதி நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் உள்ளிட்ட 3 பேர் தாக்குதல் நடத்தினர். இதை கண்டித்து மாநிலம் முழுவதும் மதிய உணவு இடைவேளையின் போது வருவாய்த்துறையினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். இதில் கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பூபதி, மாவட்ட செயலாளர் அறிவழகன் மற்றும் நிர்வாகிகள், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் அரவிந்த் நன்றி கூறினார்.
தாலுகா அலுவலகம்
இதேபோல், கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் முன்பு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் குருநாதன் தலைமை தாங்கினார். வட்டத்தலைவர் குமரேசன் முன்னிலை வகித்தார். இதில் தாசில்தார் சம்பத் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், வருவாய்த்துறை அலுவலர் பிரபாகரனை தாக்கியதில் கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரனின் பதவியை பறிக்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.