கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ேகாரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சிவராஜ் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் கண்ணு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பழனி, மாவட்ட துணைச்செயலாளர் சின்னசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், மா விவசாயத்தை பாதிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளை கண்டறிந்து அரசு தடை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும். மா உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் இருந்து வாங்கும் மாங்காய்களுடன் டன் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
மாங்கூழ் உற்பத்தி
மா விவசாயிகளுக்கு தரமான மருந்துகளை மானிய விலையில் அரசே வழங்க வேண்டும். மா விவசாயிகளுக்கு மருந்து தெளிக்கும் விசை தெளிப்பான் முழு மானியத்தில் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாங்கூழ் உற்பத்தி மற்றும் பதனிடும் தொழிற்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.