திறந்தவெளியில் நெல் மூட்டைகள் வைத்துள்ளதை கண்டித்துஓசூரில் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓசூர்
ஓசூரில் திறந்தவெளியில் நெல் மூட்டைகள் வைத்துள்ளதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடி சோதனைச்சாவடி அருகே திறந்த வெளி சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு தமிழகத்தின் டெல்டா பகுதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட நெல்மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. திறந்தவெளியில் நெல்மூட்டைகள் வைக்கப்பட்டு இருப்பதை கண்டித்தும், சேமிப்பு கிடங்கு அமைக்க வலியுறுத்தியும், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மகளிரணி தலைவி முத்துலட்சுமி தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ்ரெட்டி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட மகளிரணி செயலாளர் தீபா, மாவட்ட பொருளாளர் முனிராஜுலு, ஓசூர் ஒன்றிய செயலாளர் அஸ்வதப்பா, மாவட்ட இளைஞரணி செயலாளர் விசுவநாத், கொள்கை பரப்பு செயலாளர் சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாக்குவாதம்
ஆர்ப்பாட்டத்தில், திறந்தவெளியில் வைத்திருந்த நெல் மூட்டைகள் சுமார் 30 சதவீதம் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன. இதனால் ஓசூரிலேயே சேமிப்பு கிடங்கு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர்.
முன்னதாக, நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்காதது குறித்து சங்க நிர்வாகிகள், அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.