விருத்தாசலத்தில் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்:தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை பிரேமலதா விஜயகாந்த் பேச்சு


விருத்தாசலத்தில் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்:தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
x
தினத்தந்தி 11 Aug 2023 12:15 AM IST (Updated: 11 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்று விருத்தாசலத்தில் தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

கடலூர்

விருத்தாசலம்,

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்தும், விவசாயிகளையும், தொழிலாளர்களையும் வஞ்சிக்கின்ற என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்தும் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர்கள் சிவக்கொழுந்து, உமாநாத் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட அவை தலைவர்கள் ராஜாராம், பாலு, மாவட்ட பொருளாளர் ஏ.பி.ராஜ், தென்னவன், மாவட்ட துணை செயலாளர் ராஜவன்னியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருத்தாசலம் நகர செயலாளர் ராஜ்குமார், மாவட்ட துணை செயலாளரும், விக்னேஷ் பஸ் உரிமையாளருமான பி.எஸ். வேல்முருகன் ஆகியோர் வரவேற்றனர்.

இதில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

சென்று வா, வென்று வா

வன்முறைகளே இல்லாமல் நாட்டுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும், மக்களின் உரிமைக்காக போராடும் இயக்கம் தே.மு.தி.க.. கேப்டன் விஜயகாந்த் சூப்பராக இருக்கிறார்.

நான் இன்று விருத்தாசலம் செல்கிறேன் என்று கூறினேன். சென்று வா வென்று வா என்றார். என் மக்களை கேட்டதாக சொல் என்றார். வெகு விரைவில் விருத்தாசலத்தில் ஒரு மாநாடு அல்லது மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு கேப்டன் விஜயகாந்த் வருவார். கடலூர் மாவட்டம் தே.மு.தி.க.வின் முதன்மையான மாவட்டம்.

இந்த தி.மு.க. அரசு தேர்தலுக்கு முன்பு கூறிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அனைத்து பெண்களுக்கும் 1000 ரூபாய் வந்துவிட்டதா என்றால் இதுவரை வரவில்லை. தி.மு.க. திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள். இந்தியா முழுக்க இந்த ஆட்சி தேவை என்கிறார்கள். தேர்தலுக்கு முன் ஒரு வாக்குறுதி, தேர்தலுக்கு பின் ஒரு வாக்குறுதி. இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

விளைநிலங்களை அழித்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் என்.எல்.சி. நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம். பரவனாறு வாய்க்காலை சீரமைக்கிறோம் எனக் கூறி ஒட்டுமொத்த விளைநிலங்களையும் பாழடித்துக் கொண்டிருக்கும் என்.எல்.சி. நிர்வாகமே உங்களது செயலை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் தமிழகம் முழுவதும், தே.மு.தி.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தே தீரும். என்.எல்.சி. நிர்வாகத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுப்போம்.

என்.எல்.சி.க்கு துணை போகிறது

2 அமைச்சர்கள் இருந்தும் கடலூர் மாவட்டத்திற்கும் விருத்தாசலம் தொகுதிக்கும் இதுவரை எதுவும் செய்யவில்லை. என்.எல்.சி. எடுக்கின்ற முடிவுகள் அனைத்தும் மக்களுக்கு எதிராக இருக்கிறது. இந்த அரசு என்.எல்.சி.க்கு துணை போகிறது. வாக்களித்த மக்களுக்கு துணையாக இல்லை. தமிழக அரசும், முதல்-அமைச்சரும் உங்களுக்கு குரல் கொடுக்க வேண்டும்.

2021-ம் ஆண்டில் இந்த தொகுதியில் போட்டியிட உங்களை தேடி வந்தேன். நீங்கள் எனக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. ஆனால் நான் சுவரில் அடித்த பந்தை போல திரும்பத் திரும்ப உங்களை நாடி வருகிறேன். உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவித்தே தீர வேண்டும் என்ற கோரிக்கையை முதல்-அமைச்சரிடமும், கவர்னரிடமும் கொண்டு செல்வேன்.

தகுதியான ஓட்டா?

மக்களுக்காக நேர்மையாக உழைக்கும் தே.மு.தி.க.வுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும். ஒரு மாற்றம் வர வேண்டும். தகுதியானவர்களுக்கு ஆயிரம் ரூபாய் என கூறும் நீங்கள் ஓட்டு வாங்குவதற்கு முன்பு இது தகுதியான ஓட்டா? தகுதி இல்லாத ஓட்டா என பார்த்தீர்களா? அதனால் உங்கள் ஆட்சியை கவிழ்த்து விடுங்கள். மக்களை சந்தியுங்கள். உங்கள் வாக்குறுதியை கூறுங்கள். அதற்கு பிறகு நீங்கள் ஜெயித்து மீண்டும் ஆட்சி அமைக்க முடியுமா? என்ற கேள்வியை நான் உங்கள் முன்வைக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி?

பிரேமலதா விஜயகாந்த் பதில்

விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நியாயமான தண்ணீரை உடனடியாக திறந்து விட வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் சார்பில் நாங்கள் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம். எங்கள் கட்சி எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த இலக்கை அடைவோம். மேலும், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து உரிய நேரத்தில் கேப்டன் விஜயகாந்த் அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story