நெய்வேலியில் நாளை மறுநாள் என்.எல்.சி.யை கண்டித்து ஆர்ப்பாட்டம் பா.ம.க. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
நெய்வேலியில் நாளை மறுநாள் என்.எல்.சி.யை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பா.ம.க. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெய்வேலி,
ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட பா.ம.க. அவசர ஆலோசனை கூட்டம் நெய்வேலி என்.எல்.சி. ஆர்ச் கேட் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு கடலூர் வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளரும், பொறியாளருமான ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் சண்.முத்துகிருஷ்ணன், செல்வமகேஷ், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் 299 பொறியாளர் பணி நியமனத்தில் தமிழர் ஒருவருக்கு கூட வாய்ப்பு கொடுக்காததை கண்டித்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனையின் பேரில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) என்.எல்.சி.ஆர்ச் கேட் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, என்.எல்.சி. நிறுவனத்தில் தொழிலாளர் நியமனத்தில் தமிழர்களுக்கு 100 சதவீதமும், அதிகாரிகள் நியமனத்தில் 50 சதவீதமும், குறிப்பாக வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்,
சுற்றுப்புறசூழல் மேம்பாட்டு நிதியை நெய்வேலியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு முழுமையாக செலவிட வேண்டும் என்பதுஉள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பா.ம.க. மாநில துணைத் தலைவர் முத்து. வைத்திலிங்கம், மாவட்ட முன்னாள் செயலாளர் காசி. நெடுஞ்செழியன், மாவட்ட தலைவர்கள் தடா. தட்சிணாமூர்த்தி, கருணாநிதி, பாட்டாளி தொழிற்சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் திலகர், மாநில செயற்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் நந்தல், மாவட்ட அமைப்பு செயலாளர் கயல் ராஜன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.