விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வை கண்டித்து திருப்பத்தூரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் விலைவாசியை கட்டுப்படுத்தாத தி.மு.க. அரசை கண்டித்து, திருப்பத்தூர் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். நகர செயலாளர் டி.டி.குமார் வரவேற்றார். வாணியம்பாடி தொகுதி ஜி.செந்தில்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-
விலைவாசி உயர்வு
தமிழ்நாட்டில் உள்ள கவர்னர் மக்கள் பக்கம் நின்று மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறார். அ.தி.மு.க. எதிர்க்கட்சி வேலையை சிறப்பாக செய்து வருகிறது. தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்போம், விலை ஏற்றத்தை தடுப்போம் என கூறியுள்ளார்கள்.
ஆனால் தக்காளி, இஞ்சி, பூண்டு விலை உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த கால எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் வெங்காய விலை ஏறிய போது அண்டை மாநிலங்களில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நான் அமைச்சராக இருந்தபோது மத்திய அரசின் வருமானவரி சோதனை நடைபெற்றது. பின்னர் தி.மு.க. அரசின் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் சோதனை நடத்தப்பட்டது. அனைத்து சோதனைகளுக்கும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஒத்துழைப்பு தந்தார்கள். ஆனால் தற்போதைய நிலைமை வேறு. எதற்கும் ஒத்துழைப்பு தருவதில்லை. அவர்களிடம் மடியில் கனம் உள்ளது அதனால் பயப்படுகிறார்கள்.
பாடம் புகட்டுவார்கள்
எந்தவித வாக்குறுதியையும் நிறைவேற்றாததால் மக்கள் தி.மு.க. அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். இது வரும் தேர்தலில் எதிரொலிக்கும். மேலும் பால் விலை, சொத்து வரி, பஸ் கட்டணம், மின்சார கட்டணம் உயர்வு உள்ளிட்ட உயர்வுகளை தொடர்ந்து மீண்டும் இரண்டாவது முறையாக மின்சார கட்டணம் உயர்வு ஏற்படுத்தி உள்ளார்கள். ஆகையால் விரைவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் நடைபெறும். அப்போது மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கண்டன கோஷங்களை மாவட்ட பாசறை செயலாளர் டி.டி.சி.சங்கர் வாசித்தார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் டாக்டர் லீலா சுப்பிரமணியம், இணை செயலாளர் ஏ.ஆர். ராஜேந்திரன், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் வாசுதேவன், நகர துணை செயலாளர் ஏ.ஆனந்தன், ஒன்றிய செயலாளர் டாக்டர் என்.திருப்பதி, சி.செல்வம், மாவட்ட பிரதிநிதி டி.எம்.ரவி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வி.பெருமாள், மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு இணைச் செயலாளர் ரா.ரமேஷ், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் ஆர்.ஆறுமுகம், கே.எம்.சுப்பிரமணியம், சோடா வாசு, ஆனந்தபிரபு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி கவுன்சிலர் எஸ்.எம்.எஸ்.சதீஷ் நன்றி கூறினார்.