கிராமத்திற்கு செல்லும் சாலை தடைபட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்


கிராமத்திற்கு செல்லும் சாலை தடைபட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

பொன்னை அருகே சென்னை-பெங்களூரு விரைவு சாலை அமைப்பதால் கிராமத்தில் செல்லும் சாலை தடைபட்டுள்ளதை கண்டித்து பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

சாலை மூடப்பட்டது

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா மேல்பாடி சிவபுரம் பகுதியில் சென்னை- பெங்களூரு அதிவிரைவு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த நான்கு மாதத்திற்கும் மேலாக சிவபுரம் பகுதிக்கு செல்லும் பிரதான சாலை மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று சிவபுரம் பகுதியில் மோகன் என்பவரை பாம்பு கடித்துள்ளது.

இதனையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதற்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிவபுரம் பகுதிக்கு வருவதற்கு வழியில்லை எனவும், மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மேல்பாடி பகுதிக்கு அழைத்து வாருங்கள் என கூறியதாக கூறப்படுகின்றது.

ஆர்ப்பாட்டம்

இதனையடுத்து சென்னை -பெங்களூரு விரைவு சாலை அமைப்பதால்தான் தங்கள் கிராமத்திற்கு போக்குவரத்து தடைபட்டுள்ளதாகவும், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் பாதிக்கப்படுகி்றார்கள். கியாஸ் சிலிண்டர் வாகனம் எங்கள் கிராமத்திற்கு வருவதில்லை, கூலி வேலைகளுக்கு செல்பவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்று அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர்.

இந்த நிலையில் சிவபுரம் கிராம பொதுமக்கள் நேற்று சென்னை- பெங்களூரு விரைவு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த பொன்னை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார், பெருமாள், தனிப்பிரிவு காவலர் செந்தில் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிவபுரம் பகுதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சென்னை- பெங்களூரு விரைவு சாலை அமைக்கும் அதிகாரிகளை அழைத்து உடனடியாக சிவபுரம் பகுதி பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பதாகவும், நாளை (இன்று) காலை தங்கள் கோரிக்கைகள் முழுவதும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததை அடுத்து கிராம பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story