வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
தேனியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தேனி நகர் மதுரை சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியை முற்றுகையிட்டு, 'எங்கே எனது வேலை?' என்ற கோரிக்கை முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட துணைத்தலைவர் வீரையா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழ்பெருமாள், மாவட்ட துணைச்செயலாளர் சரவணபுதியவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு 90 சதவீதம் வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு பணியிடங்களை தமிழக இளைஞர்களுக்கே முழுமையாக வழங்க வேண்டும், மத்திய, மாநில அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும், பகத்சிங் தேசிய வேலை உறுதியளிப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், ஓய்வு பெறும் அரசு பணியாளர்களின் வயது வரம்பு 60 ஆக உயர்த்தியதை மீண்டும் 58 ஆக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.