புதுக்கோட்டையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
எதிர்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை சபாநாயகர் அங்கீகரிக்காததால் இதனை கண்டித்து சென்னையில் அ.தி.மு.க.வினர் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து தமிழகத்தில் ஆங்காங்கே அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க.வினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர்.
கறம்பக்குடி, மணமேல்குடி
எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து கறம்பக்குடி சீனி கடை முக்கத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு ஆகியோருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் மணமேல்குடியில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
அன்னவாசல்
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அன்னவாசல் பஸ் நிலையம் அருகே ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தி.மு.க.வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.