நுகர்பொருள் வாணிபக்கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
பொதுவினியோக திட்டத்தை பலப்படுத்தக்கோரி நுகர்பொருள் வாணிபக்கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக சி.ஐ.டி.யூ. பொது தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை நாகை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். மண்டல பொருளாளர் முருகானந்தம், துணைத்தலைவர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் ஏழுமலை ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். பொதுவினியோக திட்டத்தை பலப்படுத்த வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் வசம் உள்ள அமுதம் ரேஷன் கடையை கூட்டுறவுதுறைக்கு மாற்றம் செய்யும் முடிவை கைவிட வேண்டும். கொள்முதல் பணியில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நீண்ட நாட்களாக இயக்கம் செய்யாமல் தேக்கம் அடைந்துள்ள நெல் மூட்டைகளை இயக்கம் செய்யும் போது ஏற்படும் இயக்க இழப்பிற்கு தீர்வு காண வேண்டும். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில் மாவட்ட துணை செயலாளர் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.