அரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
அரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூரில் உள்ள அரசு சிமெண்டு ஆலைக்கு கடந்த 1996-ம் ஆண்டு புதுப்பாளையம், ரெட்டிபாளையம், பெரியநாகலூர், வாலாஜாநகரம், கயர்லாபாத், அமீனாபாத் ஆகிய 15 கிராமங்களில் உள்ள 600 விவசாயிகளிடம் இருந்து ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீட்டுத்தொகை வழங்கி நிலத்தை கையகப்படுத்தியது. இழப்பீட்டு தொகை குறைவாக இருப்பதாககூறி பல்வேறு விவசாயிகள் சுமார் 400-க்கும் மேற்பட்ட வழக்குகளை தொடர்ந்தனர். இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு 300 விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரம் வழங்கவும், அதனை வட்டியுடன் சேர்ந்து ரூ.8 லட்சமாக தர அரியலூர் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அரசு சிமெண்டு ஆலை நிர்வாகம் தராமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதனை கண்டித்தும், நீதிமன்றம் கூறிய இழப்பீட்டுத்தொகையை வழங்க வேண்டும், வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிலம் கொடுத்த விவசாயிகள் அரியலூர் அண்ணாசிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.