அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் ராணி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அந்துவன் சேரல் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். இதில் 100-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு 01.07.2022 அன்று முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கியது போல, தமிழக அரசும் வழங்க வேண்டும். அரசு வேலைவாய்ப்பை தனியாருக்கு தாரைவார்க்க வழிவகை செய்யும் அரசு ஆணை எண் 115-ஐ ரத்து செய்ய வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை வரன்முறை செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.