நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் திருவண்ணாமலை மண்டலம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று காலை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் திருநாவுக்கரசு, சண்முகம், மாரிமுத்து, குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். கோட்ட பொருளாளர்கள் ரவி, ஜேம்ஸ், மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியருக்கான ஊதிய மாற்றம் வழங்க வேண்டும்.
கிராமப்புற இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் அகவிலைப்படி, நிரந்தர பயணப்படி, சீருடை சலவைப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடலிலும், நெற்றியிலும் பட்டை, நாமம் அணிந்து இருந்தனர்.
இதில் திருவண்ணாமலை, செய்யாறு, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் கோட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.