நில அளவையர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் நில அளவையர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எல்.ரவி தலைமை தாங்கி, தொடங்கி வைத்து பேசினார். கோட்ட தலைவர் வினோத் வரவேற்றார். செயலாளர் பனிமலர், சார் ஆய்வாளர்கள் முரளிவாணன், முருகன், மோகன், ஏகாம்பரம் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் களப்பணியாளர்களின் பணி சுமையை குறைத்திட வேண்டும். நில அளவை சார்ந்த அனைத்து பணிகளையும் செய்திடும் களப் பணியாளார்களின் ஒட்டு மொத்த பணியினையும் கருத்தில் கொள்ளாமல் உட்பிரிவு பட்டா மாறுதல் பணியினை மட்டும் ஆய்வுக்குட்படுத்தும் போக்கினை கைவிட வேண்டும். கடுமையான பணிச் சுமையுடன் வேலை பார்க்கும் நில அளவையர்கள் முதல் உதவி இயக்குனர்கள் வரை நிலுவை மனுக்களை காரணம் காட்டி ஏற்படுத்தப்பட்டுள்ள குற்ற குறிப்பாணை மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 26 ஆம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் பூபதி நன்றி கூறினார்.