கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த கீழ்கொத்தூர் ஊராட்சியில் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மலையை ஒட்டி அமைந்துள்ளதால் மழை காலத்தில் மலைகளில் ஏற்படும் வெள்ளமானது அங்குள்ள பேயாற்றில் கலக்கிறது. மலை பகுதிகளில் இருந்து நேரடியாக பேய் ஆற்றில் மழை வெள்ளம் ஓடுவதால் அரிப்பு ஏற்பட்டு ஆற்றில் மணல் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் ஆற்றில் சேரும் மணலை அப்பகுதியில் உள்ள சிலர் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் கீழ்கொத்தூர் கிராமத்தில் இரவு, பகலமாக நடைபெறும் மணல் கடத்தலை அப்பகுதி மக்கள் மனுக்களாக அதிகாரிகளிடம் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் மணல் கடத்தலை தடுக்காத அதிகாரிகளை கண்டித்து கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேப்பங்குப்பம் போலீஸ் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் கருணாகரன், போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.