மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு திருவண்ணாமலை கிளை சார்பில் நேற்று திருவண்ணாமலை வேங்கிக்கால் மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் மகாலிங்கம், பழனிவேல், கருணாகரன், ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கவுரவ தலைவர் மன்னார், மாவட்ட செயலாளர் நீதிமாணிக்கம், கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் ஆரணி, போளூர் உள்ளிட்ட பல கோட்டங்களில் 3 வருடங்களுக்கு மேலாகியும் சி.பி.எஸ். தொகை வழங்கப்படாமல் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும்.
பலருக்கு குடும்ப ஓய்வூதியம் ஒரு ஆண்டுக்கு மேல் வழங்காமல் நிலுவையில் உள்ளது. உடனடியாக குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு 3 மாத காலத்திற்குள் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணிப்பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கஜேந்திரன் நன்றி கூறினார்.