ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

உயர்கல்வி நிறுவனங்களில் சாதிரீதியாக நடக்கும் தற்கொலை நிகழ்வுகளை தடுக்க கோரி நேற்று தூத்துக்குடியில் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முத்துலட்சுமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் ஞானசேகர், மாநகர உதவிச்செயலாளர் மாடசாமி, மாவட்ட செயலாளர் கரும்பன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

கோரிக்கை

ஆர்ப்பாட்டத்தில், உயர்கல்வி நிறுவனங்களில் சாதி ரீதியாக தற்கொலை நிகழ்வுகளை தடுத்து நிறுத்தக்கோரியும், அரசியல் அமைப்பில் உள்ளபடி இடஒதுக்கீட்டு கொள்கைகளை ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் பல்கலைக்கழகங்களில் அமல்படுத்த கோரியும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையத்திற்கு நீதித்துறை அதிகாரங்களை அளித்து சுயமாக செயல்படும் அமைப்பாக உருவாக்க கோரியும், ஆதித்திராவிடருக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் ஆதிக்க சாதியினரால் பறிக்கப்பட்டதை மீட்டு ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும், வேங்கை வயல் கிராமத்தில் அனைவருக்குமான பொதுவான நீர்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட உதவிச்செயலாளர் பாபு, மாவட்டக்குழு உறுப்பினர் கண்ணம்மாள், அசோக்குமார், அம்பிகா, விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story