பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்


பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Jan 2023 12:15 AM IST (Updated: 26 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழமாத்தூர், ஓலையாம்புத்தூர், மேலமாத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு சீர்காழியில் இருந்து மேலமாத்தூர் வரை தடம் எண் 17 என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது.

இந்த பஸ் தினசரி காலை, மாலை என இருவேளை சென்று வந்ததால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட இந்த பஸ் மீண்டும் இயக்கப்படவில்லை.

இது குறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து வருகிற 27-ந் தேதி அரசூரில் சாலைமறியல் போராட்டம் நடத்தபோவதாக அப்பகுதி மக்கள் அறிவித்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த சீர்காழி அரசு போக்குவரத்துக் கிளை அலுவலகத்திற்கு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சென்றனர். இதில் உடன்பாடு ஏற்படாததால் சீர்காழி அரசு போக்குவரத்து கிளை கழகம் முன்பு பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் சீர்காழி கிளை மேலாளர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது 7 நாட்களுக்குள் பஸ் இயக்கப்படும் என அறிவித்ததை அடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story